
17-ந் தேதி ஜெ.வோட ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கப்படுவதைப் பற்றித் தானே சொல்றே? அவருக்காக மூத்த வக்கீலான ஃபாலி எஸ் நரிமன் ஆஜராகியிருக்காரே! இந்தியாவோட அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரலா இருந்தவர், அரசியல் சட்டத்தை மேம்படுத்தத் துணை நின்றவர், எமர்ஜென்சியின் போது தன் பதவியை ராஜினாமா செய்தவர், பத்ம பூஷன்-பத்மவிபூஷன் விருதுகள் வாங்கியவர். இப்படிப் பல பெருமைகள் கொண்ட பிரபல வக்கீலாச்சே அவர்.
ஆமாங்க தலைவரே.. வழக்குக்கான பாயிண்ட்டுகளை மட்டும்தான் பேசுவாரு நரிமன். அநாவசியமா கோர்ட்டில் வாதங்களை அதிகப்படுத்தி நேரத்தை இழுத்தடிக்க மாட்டாரு. 13-ந் தேதி ஜெ.வின் மனுவை அவசர மனுவா அவர் மென்ஷன் செய்தப்பகூட, மை லார்ட், தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டிய அவசர வழக்கு இதுன்னு ஒரு லைனில் சொல்லி, மனுவை சமர்ப்பிச்சாரு. தலைமைநீதிபதி தத் தலைமையிலான பெஞ்ச் மனுவை பரிசீலிச்சிட்டு, அவசரமா எடுக்க அவசியமில்லைன்னு கருதியதால, 17-ந் தேதிக்கு விசாரணையை ஒத்தி வச்சிடிச்சி. நரிமனும் கோர்ட் நடைமுறைகளைக் கணக்கில் கொண்டு, 17-ந் தேதி வாதங்களுக்கு ரெடியாகிக்கொண்டிருக்காரு.
ஜெ.வோட மனு செவ்வாய்க்கிழமையன்னைக்கு விசாரணைக்கு வரும்னு ஏற்கனவே தகவல்கள் வந்தப்ப, அன்னைக்கே பெயில் கிடைச்சிடும்னு மந்திரிகள் உள்பட எல்லா நிர்வாகிகளும் எதிர்பார்த்தாங்க? தமிழ்நாட்டிலே இருக்கிற அ.தி.மு.க நிர்வாகிகளும் சரி, பெங்களூருக்குப் போய் முகாமிட்டிருக்கிற அ.தி.மு.க.வினரும் சரி, அப்படித்தான் எதிர்பார்த்திருந்தாங்க.
மந்திரிகள் உள்பட பலருக்கும் சுப்ரீம் கோர்ட் நடைமுறைகள் சரியாத் தெரியலைன்னு வக்கீல்கள் வட்டாரத்தில் சொல்றாங்க தலைவரே.. சுப்ரீம்கோர்ட்டைப் பொறுத்தவரை முன்னெல்லாம் இந்த நீதிபதிகிட்டே கேஸைக் கொண்டு போகலாம்னு முயற்சிகள் நடக்கும். இப்ப எல்லாம் கம்ப்யூட்டர்மயம்ங்கிறதால, வழக்கின் டீடெய்லெல்லாம் அந்தந்த பெஞ்ச்சில் இருக்கிற நீதிபதிகள்கிட்டே போயிடும். தலைமை நீதிபதி ஸ்பெஷல் அட்டென்ஷன் எடுத்தால் மட்டும்தான் வேற நீதிபதிக்கு மாற்றப்படும்.
சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதியா சதாசிவம் இருந்தப்ப, சொத்துக் குவிப்பு கேஸிலே இன்னார்தான் அரசு வக்கீலா இருக்கணும், இன்னார்தான் நீதிபதியா இருக்கணும்னு ஜெ. தரப்பில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி சவுகான் பெஞ்ச்சுக்கு டிரான்ஸ் பர் பண்ணினாரே, அது மாதிரியா?
ஆமாங்க தலைவரே.. அந்த கேஸில்கூட நீதியரசர் சவுகானோட ஆரம்பகட்ட உத்தரவுகள், வழக்கை ஜெ. இழுப்பதற்கு வசதியா அமைவது போல இருந்ததா சட்டத் துறையினர் நினைச்சாங்க. ஆனா, கடைசியில் அவர் ரிடையர்ட்டாகும் நேரத்தில் போட்ட உத்தரவுகளெல்லாம் ஜெ. தரப்புக்கு கடும் கண்டனங்களா அமைஞ்சிடிச்சி. ஊழல் வழக்குகளில் சுப்ரீம்கோர்ட் சமீப காலமா ரொம்ப கறாரா இருப்பதை சுட்டிக்காட்டுற வக்கீல்கள், 40 நாட்களுக்கு முன்னாடி யாருக்கும் ஜாமீன் கொடுத்ததில்லைன்னு பழைய தீர்ப்புகளை சுட்டிக்காட்டுறாங்க.
அப்படின்னா அக்டோபர் 17-ந் தேதியே ஜாமீன் மனு மீதான விசாரணை முடிஞ்சிடாதா?
முதலில் ஜெயலலிதாவுக்கு மட்டும் ஜாமீன் மனு போடப்பட்டது. அப்புறம் மற்ற மூணு பேருக்கும் போடப்பட்டிருக்குது. 17ந் தேதி இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் பரிசீலிச்சி, இதற்குப் பதிலளிக்கும்படி அரசுத் தரப்புக்கு 15 நாள் அவகாசம் கொடுத்து நோட்டீஸ் தரும். அரசுத் தரப்புன்னா அதில் தமிழக அரசோட லஞ்ச ஒழிப்புத்துறையும் அடக்கம். அதனால அவங்க சார்பில் பவானிசிங்கை அரசு வக்கீலா நியமிச்சி, 17-ந் தேதியன்னைக்கு சுப்ரீம்கோர்ட்டுக்கு அனுப்பலாம்னும் எதிர்பார்க்கப்படுது.
அப்படி அவர் சுப்ரீம்கோர்ட்டில் ஆஜராகி, இப்பவே வாதாடுறேன்னு சொன்னாருன்னா, நோட்டீஸே கொடுக்காத நிலையில் நீங்க எப்படி ஆஜரானீங்கன்னு நீதிமன்றம் கேட்குற வாய்ப்பு இருக்குது. அதோடு, குற்றவாளிகளுக்கும் அரசுத் தரப்புக்கும் தொடர்பு இருக்குதாங்கிற கேள்வியையும் எழுப்பக்கூடும்.
நீதிபதிகளோட கோபத்தை நரிமன் மாதிரியான சீனியர் வக்கீல்கள் விரும்பமாட்டாங்க. சட்டப்படியான அவகாசம் கொடுக்கப்பட்டால் அதை எதிர்க்கமாட்டாங்க. 18-ந் தேதியிலிருந்து 26-ந் தேதிவரை சுப்ரீம்கோர்ட்டுக்குத் தீபாவளி விடுமுறைங்கிறதால ஜெ.வின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் எதுவும் நடக்கலாம்ங்கிறாங்க.
பெங்களூரு ஜெயிலில் இருக்கிற ஜெ. இதையெல்லாம் எப்படி பார்க்கிறாராம்?
தொடரும் அதிர்ச்சிகளால வக்கீல்களைக்கூட அவர் சந்திக்கலை. சசிகலா தரப்புதான் சந்திக்குது. அதுவும் கார்டனில் இருந்தபடி சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கான விஷயங்களை கவனித்த வக்கீல் செந்தில் மட்டும்தான் சசிகலாகிட்டே பேசியிருக்காரு. அதை ஜெ.கிட்டே சசிகலா சொல்வது வழக்கமா இருக்குது.
பெங்களூரு கேஸில் விடுதலை நிச்சயம்னு கார்டனை நம்பவச்சவரு இந்த செந்தில்தான். இன்னமும் அவரோட வார்த்தைகளை ஜெயலலிதாவும் சசிகலாவும் நம்புவதை அ.தி.மு.கவில் உள்ள மற்ற வக்கீல்களே ஆச்சரியத்தோடு பார்க்குறாங்க. அதே நேரத்தில் ஜோசியமும் தீவிரமா பார்க்கப்படுது.
அதிலே கார்டன் தரப்புக்கு ரொம்ப நம்பிக்கையாச்சே, ஜோசியத் தரப்பு என்ன சொல்லுதாம்?
ஜெ. திரும்பவும் பவருக்கு வந்திடுவாருன்னு ஒரு சில ஜோசியக்காரங்க சொன்னாலும், பெரும்பாலானவங்க எதிர்மறையாத்தான் சொல்லியிருக்காங்க. இதெல்லாம் முன் கூட்டியே எதிர்பார்த்த விஷயம்தான்னும், கிரகப் பெயர்ச்சிகள் இந்த காலகட்டத்தில் சரியில்லைங்கிறதால, முன்கூட்டியே இந்தக் கேஸை முடிக்கும்படி சொல்லியிருந்தோம்னு சொல்றாங்க.
ஜெ.வைப் பொறுத்தவரை பாசிட்டிவ்வான பதிலைத்தான் எதிர்பார்ப்பாருங்கிறதால அதுக்கேற்றமாதிரி பூசி மெழுகிப் பலரும் அப்பவே இதைப் பற்றி சொல்லியிருக்காங்க. அதோடு, ஜெ.வே ஜாதக விஷயங்களில் எக்ஸ்பர்ட்டுங்கிறதால அவர் இதையெல்லாம் புரிஞ்சிருப்பாருன்னு நினைச்சோம்னு சொல்றாங்க. இன்னும் சில வருசங்களுக்கு கட்டம் சரியில்லையாம். சனியோட நிலை அப்படியாம்.
அந்த சனி இருக்கட்டும். போன சனிக்கிழமையன்னைக்கு கலைஞரை அரெஸ்ட் பண்ணப் போறதா கோட்டை ஏரியாவிலும் மீடியாக்கள் வட்டாரத்திலும் பரபரப்பு கிளம்புச்சே?
நம்ம நக்கீரன்தான் ஜெ.வின் ஜெயில் அசைன்மென்ட் பற்றி ஏற்கனவே கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்ததே, தனக்கு ஜாமீன் கிடைக்கிறதுக்கு முன்னாடி கலைஞரையும் மு.க.ஸ்டாலினையும் அரெஸ்ட் செஞ்சாகணும்னு ஜெ. நினைக்கிறாரு. கலைஞரை கைது செய்தால் 91 வயது தலைவரை அரெஸ்ட் செய்வதான்னு பிரச்சினை வரும்னா, ஸ்டாலினைக் கைது செய்யலாம்லன்னு பிரஷர் வந்திருக்குது.
இதையடுத்து முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், டி.ஜி.பி ராமானுஜம், அரசு ஆலோசகர் ஷீலாபாலகிருஷ்ணன், சிட்டி கமிஷனர் ஜார்ஜ் இவங்களெல்லாம் ஆலோசிச்சி, கைதுக்கும் ரெடியாயிட்டாங்க. ஆனா….
என்ன ஆனா?
அதை நான் சொல்றேன்.. கமிஷனர் ஜார்ஜுக்குத் தயக்கம். கலைஞரை மிட்நைட்டில் அவசரமா கைது செஞ்ச விவகாரத்திலே கோர்ட்டில் இவர் கண்டிக்கப்பட்டாரு. பனிஷ்மெண்ட்டில் நாகர்கோவிலுக்கு தூக்கியடிக்கப்பட்டு, ஆண்டுக்கணக்கில் அங்கே இருந்துட்டுத் திரும்பி வந்தாரு. அதனால இந்த முறை ஸ்டாலினை கைது செய்யணும்னா ஸ்ட்ராங்கான வழக்கின் அடிப்படையில் இருக்கணும்னு நினைக்கிறாரு. தயக்கத்துக்கு காரணம் இதுதான். மேலிட அசைன்மென்ட்டை நிறைவேற்ற தயங்குவதால ஜார்ஜ் மாற்றப்படுவாரான்னு இப்ப விவாதம் நடந்துக்கிட்டிருக்குது.
லாஸ்ட் புல்லட்!
ஜெ.வுக்கு பெங்களூரு நீதிமன்றம் விதித்த 100 கோடி ரூபாய் அபராதத் தொகையை ஒருவேளை உச்சநீதிமன்றம் கட்டச் சொன்னால் உடனடியாக கட்டவேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.க்களும் தலா 4 கோடி, 5 கோடி ரூபாய் என பணக்கட்டுகளோடு டெல்லி தமிழ்நாடு ஹவுசில் தங்கியிருக்கிறார்கள்.
ஜெ.வின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் அரசு வக்கீலாக பவானிசிங் நியமிக்கப்பட்டால் அந்த நியமனத்தை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய தே.மு.தி.க தரப்பில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோதுதான் வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்றவேண்டும் என்ற வழக்குப் போடப்பட்டு அதனை சுப்ரீம்கோர்ட் ஏற்றது. தற்போது, சட்டமன்ற எதிர்க்கட்சியாக தே.மு.தி.க இருப்பதால், பவானிசிங்குக்கு எதிரான மனு குறித்து வக்கீல்களுடன் ஆலோசித்திருக்கிறார் விஜயகாந்த்.