ஹற்றன் அழுத்கால பகுதியில் நேற்று காலை 11.30 மணியளவில் டிக்கோயா ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் டிக்கோயா ஆற்றில் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேசவாசிகள் ஹற்றன் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர். எனினும் நேற்று சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்ட இவர் ஹற்றன் எபோட்சிலி பகுதியை சேர்ந்த ராமன் சந்திரசேகரன் (வயது – 63) என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் ஹற்றன் நகரில் இவர் நடமாடியதாகவும் திடீரென காணாமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


