பிரேசிலில் 39 பேரை படுகொலை செய்த இளைஞன் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த நான்கு வருடங்களில் தொடர்ச்சியாக 39 கொலைகளை செய்துள்ளார். அதில் 16 இளம்பெண்களும் அடங்கும்.
இதுகுறித்து பிரேசில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கருத்து வெளியிடுகையில்,
சில கொலைகள் குறித்து கடந்த 70 நாட்களாக நடத்திய புலன் விசாரணையையடுத்து, தியாகோ ஹென்ரிகே கோமெஸ் டா ரோஷா (26) என்ற இளைஞரை கோயியானியா நகரில் வைத்து கைது செய்தோம்.
காவலாளியாகப் பணியாற்றி வந்த அவர், 2011-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 39 பேரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
கொல்லப்பட்டவர்களில் 16 இளம் பெண்களும், ஓரினச் சேர்க்கையாளர்கள், தெருக்களில் வசிப்போர் ஆகியோரும் அடங்குவர்.
அவர்கள் அனைவரும் தனக்கு அறிமுகம் இல்லாதவர்கள் எனவும், தனக்குள் அவ்வப்போது எழும் கோபம் காரணமாக இந்த கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
அவர்களை கொலை செய்ததன் மூலம் கோபம் தணித்து கொண்டதாக தியோகோ ஹென்ரிகே எங்களிடம் கூறினார்.
ஒவ்வொரு கொலைக்குப் பிறகும் குற்ற உணர்ச்சி ஏற்பட்டதாகவும், பிறகு அதே குற்ற உணர்ச்சி கோபமாக மாறி மற்றொரு கொலைக்குக் காரணமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
கைதுக்குப் பின், சிறையிலுள்ள மின்விளக்கை உடைத்து, தனது மணிக்கட்டை கிழித்துக் கொண்டு தியோகோ ஹென்ரிகே தற்கொலைக்கு முயன்றார்.
எனினும் பாதுகாவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தியோகோ தங்கியிருந்த இடத்திலிருந்து ஒரு கைத்துப்பாக்கி, ஒரு மோட்டார் சைக்கிள், திருடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடுகள் ஆகிவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
