Select Menu

Slider

Powered by Blogger.

Srilanka

World News

Technology

Medical News

India

World 360

» » » விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்: ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!
«
Next
Newer Post
»
Previous
Older Post

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்டர் கோப் ஆஜராகி வாதாடி வந்தார்.
இந்த வழக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த விசாரணையின் போது 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தவில்லை, தங்களது மக்களுக்காக வன்முறையற்ற வழிகளில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் போராட விரும்புகின்றனர் என்று வாதிடப்பட்டது.
மேலும் விக்கிபீடியா தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது, இலங்கையில் இனப்படுகொலை என்று கூறுமளவிற்கான ஒரு ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராகத்தான் நியாயமான போராட்டத்தை விடுதலைப் புலிகள் நடத்தினர் என்றும் புலிகளின் வழக்கறிஞர் கோப் வாதிட்டார்.
இன்று இந்த வழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் சட்ட ரீதியாக கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது.
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம்!
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை ரத்து செய்து ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய யூனியன் பல கட்டுப்பாடுகளை விதித்ததோடு, தனிநபர்கள் மீதும் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
இந்த கட்டுப்பாடுகளை ரத்து செய்யக் கோரி விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் ஐரோப்பிய யூனியன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, விடுதலைப்புலிகள் இயக்கம் மற்றும் சில தனிநபர்கள் மீதான கட்டுப்பாடுகளை ரத்து செய்துள்ள நீதிமன்றம், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தற்போதைய கட்டுப்பாடுகள் பொருத்தமற்றவை என்று தீர்ப்பளித்துள்ளது.
கட்டுப்பாடுகள் அவசியம் என்றால் அது பற்றி 2 மாதங்களுக்குள் யோசனைகளை வழங்கலாம் என்றும்இ கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டது 3 மாதங்களுக்கு பின் நடைமுறைக்கு வரும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், விடுதலைப்புலிகளின் வழக்கு செலவை ஐரோப்பிய யூனியன் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இந்தியாவும் புலிகள் மீதானத் தடையை நீக்க வேண்டும்!- கி.வெங்கட்ராமன் கோரிக்கை
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேபோல் இந்தியாவும் புலிகள் மீதானத் தடையை நீக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட விரோதமானவை என, இன்று லக்சம்பேர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2001ஆம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் நியூயோர்க் நகர இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, “பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்” என்ற பெயரில், பல அமைப்புகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்டது.
இதனை தமக்குச் சாதகமாக்கிக் கொண்ட, இலங்கை – இந்தியா போன்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள், தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளையும் “பயங்கரவாத அமைப்பு” என முத்திரைக் குதித்தினர்.
அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட எந்த அயல் நாடுகளிலும், புலிகள் ஆயுதம் தாங்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை என்ற போதிலும், இலங்கை மற்றும் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகங்களின் அழுத்தங்களுக்கு ஏற்ப, அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு, இத்தடை மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதன் உச்சமாக, 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களை கூட்டம் கூட்டமாகக் கொன்ற இனக்கொலைப் போர், “பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்” என்று ஞாயப்படுத்தப்பட்டது. அதற்கு இந்தத் தடை உதவியாக இருந்தது.
இந்நிலையில் தான், போர் முடிந்ததாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் முழுவதுமாக அழித்தொழிக்கப்பட்டு விட்டதாகவும் இலங்கை அரசே அறிவித்த பிறகும், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என உலக நாடுகளில் பரவி வாழும் தமிழீழத் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் கோரிக்கை வைத்தனர்.
இதன் விளைவாக, 2011ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று, டச்சு நாட்டு நீதிமன்றம், தமிழீழ விடுதலைப்புலிகள் “பயங்கரவாத அமைப்பு“ அல்ல எனத் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், 2011ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ள, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீதான தடை சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம், விடுதலைப் புலிகள் மீதானத் தடையை நீக்கக் கூறும் காரணங்கள் இந்தியாவிற்கும் பொருந்தும். தமிழ் நாட்டையும் சேர்த்து விடுதலைப் போராட்டம் நடத்துவதாக, தமிழீழ விடுதலைப்புலிகள் எப்பொழுதும் சொன்னது கிடையாது.
தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் தமிழக அமைப்புகளும், அவ்வாறு சொன்னது கிடையாது.
எனவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தீர்ப்பைப் பின்பற்றி, இந்தியாவும் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். என குறிப்பிட்டுள்ளார்.

About jvp

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post