சிங்கப்பூரின் முன்னாள் அழகுராணியொருவர் தற்போது மிருக வைத்தியராகப் பணியாற்றி வருகிறார். செரில் தெய் எனும் இந்த யுவதி 2005 ஆம் ஆண்டு மிஸ் சிங்கப்பூர் யூனிவர்ஸ் போட்டியில் அழகுராணியாக முடிசூட்டப்பட்டவர். பொதுவாக அழகுராணிகளாக தெரிவாகும் யுவதிகள் மொடலிங், நடிப்புத்துறை போன்ற தொழிற்துறைகளில் ஈடுபடுவதற்கே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இவ்வாறான துறைகளைவிடுத்து மிருக வைத்தியராக டாக்டர் செரில் தெய் பணியாற்றி வருகிறார். 10 வருட காலமாக மிருக வைத்தியராக பணியாற்றியபோது தனக்குப் பல்வேறு விநோத அனுபவங்கள் ஏற்பட்டதாக அவர் கூறுகிறார். அமெரிக்கா, அவுஸ்திரேலியா முதலான வெளிநாடுகளிலும் அவர் மிருக வைத்தியராகப் பணியாற்றியுள்ளார்.
தான் அழகுராணி போட்டியில் வெற்றியீட்டிய ஒருவர் என்பதை மருத்துவமனைக்கு வரும் தனது வாடிக்கையாளர்களில் சிலர் இனங்கண்டபின் தன்னுடன் புகைப்படம் பிடித்துக்கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதாக டாக்டர் செரில் தெய் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் சிலர் தமது செல்லப்பிராணிகள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படும் நிலையில்கூட புகைப்படம் பிடித்துக்கொள்ள விரும்புவர் என்கிறார் செரில் தெய்.
அவுஸ்திரேலியாவில் பணியாற்றியபோது, துப்பாக்கியினால் சுடப்பட்ட பறவையொன்றின் உடலிலிருந்து தோட்டாவை அகற்றியதாகவும் அவர் கூறுகிறார். பெண்களின் உள்ளாடைகளை உட்கொண்டதால் பாதிக்கப்பட்ட நாயொன்றுக்கு தான் சிகிச்சையளித்தாக டாக்டர் செரில் தெய் கூறுகிறார். மற்றொரு தடவை தம்பதியொன்று தனது வீட்டின் மேசையில் வைக்கப்பட்டிருந்த 1.5 பவுண் திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை காணவில்லை என தேடிக்கொண்டிருந்ததாகவும் பின்னர் அவர்கள் தமது நாயை எக்ஸ் றே பரிசோதனைக்கு அழைத்து வந்தபோது நாயின் உடலில் அந்த மோதிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் டாக்டர் செரில் தெய் தெரிவித்தார்.
"மற்றொரு தம்பதி தமது நாய்க்கு சிகிச்சையளிப்பதற்காக வாரத்தில் 4 தடவைகள் எனது மருத்துவமனைக்கு வந்தனர். அவ்வேளையில் பதற்றநிலை அதிகமாக இருந்தது. ஏனெனில். அவர்கள் தமது செல்லப்பிராணியை ஒரு குழந்தையைப் போன்று பராமரித்தனர்" எனவும் அவர் கூறினார். இவ்வளவு காலம் மிருக வைத்தியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட போதிலும் மிருகங்கள் இறப்பதை பார்ப்பது தன்னால் சகிக்க முடியாத துயரமாக உள்ளதெனவும் அவர் கூறுகிறார்.
"குறிப்பாக மிருகங்கள் இறக்கும்போது அவற்றின் உரிமையாளர்கள் அழும் சூழ்நிலையை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது" என்கிறார் டாக்டர் செரில் தெய். "இந்தத் தொழிலில் சில தியாகங்களை செய்ய வேண்டியுள்ளது. விடுமுறையில் இருந்தால்கூட, எனது வாடிக்கையாளர்களின் பிராணிகளை பார்ப்பதற்காக வைத்தியசாலைக்கு வரவேண்டியிருக்கும். சிலவேளை அதிகாலை 3 மணிக்கும் யாரேனும் அழைக்கக்கூடும்'' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மிஸ் யூனிவர்ஸ் சிங்கப்பூர் அழகுராணி போட்டியில் பங்குபற்றி 2005 ஆம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் போட்டியிலும் பங்குபற்றியபோதிலும் தான் ஒரு மிருக வைத்தியராகக்கூடும் என்பதை சிறு வயதிலேயே தான் உணர்ந்திருந்ததாக செரில் தெய் கூறுகிறார். "சிறுவயதிலேயே நான் குதிரைகள் மீதும் நாய்கள் மீதும் மிகவும் அன்புகொண்டிருந்தேன். எனது குடும்பத்தினரும் நாய்களை நேசித்தனர்.
ஒரு கட்டத்தில் எமது வீட்டில் ஆறு, ஏழு நாய்கள் இருந்தன" எனக் கூறும் டாக்டர் செரில் தெய் தற்போது ஒரு நாயை மாத்திரம் தனது வீட்டில் வளர்த்து வருகிறார்.