சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் சுமார் 25 கோடி இந்தியர்கள் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பயனடையும் வகையில், கட்டணம் ஏதுமின்றி பேஸ்புக் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பணப்பரிமாற்றம் செய்துக் கொள்ளும் புதிய சேவையை கோட்டக் மஹிந்திரா நிதி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தனது நண்பருக்கு பணம் அனுப்ப விரும்பும் ஒருவர், இதற்கென உருவாக்கப்பட்டுள்ள ‘கேபே’ (kaypay) இணையத்தில் உடனடியாக கணக்கு தொடங்கி, தனது எந்த வங்கிக் கணக்கில் இருந்து, யாருக்கு, எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும்? என்று தெரிவித்தால் போதும். அந்த தொகையை பெற்றுக் கொள்ளும் நண்பர் ‘கேபே’ இணையத்தில் உறுப்பினராக இல்லாதபோதிலும், அவருக்கு உடனடியாக பணம் கிடைத்துவிடும். பணத்தை பெற்றுக் கொள்ளும் நபரும் இந்த இணையத்தில் உறுப்பினராக இருக்கும்பட்சத்தில் இந்த பணப்பரிமாற்றம் வெகு விரைவில் நிகழ்ந்துவிடும்.இந்த பரிவர்த்தனைக்கு இரு தரப்பினரும் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பணம் அனுப்புபவர் மற்றும் பெற்றுக் கொள்பவர்கள் தொடர்பான விவரங்களை சரிபார்ப்பதற்காக இரண்டே அம்சங்களை மட்டும் துல்லியமாக ஆய்வு செய்த பின்னர், மிகவும் பாதுகாப்பான இந்த பணப் பரிமாற்றம் சில நொடிகளுக்குள் நடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பேஸ்புக்கில் 25 கோடி இந்தியர்கள்! கட்டணமின்றி உடனடியாக பணப் பரிமாற்றம்: புதிய சேவை அறிமுகம்!
தற்போது, ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் கைபேசி மூலம் பணப்பரிமாற்றம் செய்ய உதவும் ‘ஐ.எம்.பி.எஸ்.’ தொழில்நுட்ப கட்டமைப்பின் மூலமாக இந்த பரிமாற்றம் நடைபெறும். ஒரு பரிவர்த்தனையின் மூலம் 2 ஆயிரத்து ஐநூறு ரூபாயை மட்டும் அனுப்ப முடியும். ஒரு நபர் அதிகபட்சமாக மாதம் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே அனுப்ப முடியும். அதேவேளையில், பணம் பெற்றுக் கொள்பவரும் மாதம் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம் என கோட்டக் மஹிந்திரா நிதி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
